ECONOMYNATIONALSELANGOR

மார்ச் முதல் தேதி வரை சிலாங்கூரில் 700 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 3– இம்மாதம் முதல் தேதி வரை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தில் கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுப்பதில் இந்த தடுப்பூசி இயக்கம் பெரிதும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

நாம் நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடந்த மாதம் 25ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டதிலிருந்து நானும் சக ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தீவிரமாக செயலாற்றி வருகிறோம் என்றார் அவர்.

அந்த தடுப்பூசி மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்திய மந்திரி புசார், அந்த தடுப்பூசி பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என்றார். சிலாங்கூர் மாநிலம் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் சொந்தமாக தடுப்பூசியை கொள்முதல் செய்தப் பின்னர் தடுப்பூசித் திட்டம் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று சொன்னார்.

இதனிடையே, முதல் கட்டத் தடுப்பூசி இயக்கத்தில் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் உள்பட 68,677 பேர் தடுப்பூசிகளைப் பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார மையங்கள் மற்றும் சமூக கிளினிக்குகளில் பணிபுரியும் 14,357 பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்டமாக கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த 17,169 பேரும் இறுதியாக காவல் துறை, தீயணைப்புத் துறை போன்ற மருத்துவத் துறை சாராத முன்களப் பணியாளர்களும் இந்த தடுப்பூசிகளைப் பெறுவர்.

சிலாங்கூர் மாநிலம் 78,000 பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை பெற்றுள்ளது. அந்த தடுப்பூசிகள் தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினருக்கு கட்டங் கட்டமாக செலுத்தப்படும்.


Pengarang :