NATIONALPBTPENDIDIKANSELANGOR

யுகே பெர்டானாவில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு- மந்திரி புசார் ஒப்புதல்

அம்பாங், மார்ச் 8- இங்குள்ள யுகே பெர்டானாவில் வர்த்தக மையத்தையும்  யுகே பெர்டானா பள்ளிவாசலையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தாம் தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்ட அமலாக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்துடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று அவர் சொன்னார். இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த முப்பதாயிரம் பேர் பயன்பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

விரைவில் தீர்க்க வேண்டிய பிரச்னைகளை கண்டறிவற்காக நாங்கள் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றத் தொகுதிக்கு வருகை புரிந்தோம். குறிப்பாக, யுகே பெர்டானா பள்ளிவாசலில் மேம்பாலம் நிர்மாணிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கண்டறிந்தோம். ஆகவே, இத்திட்டத்திற்கு தேவையான நிதியை விரைவில் ஒதுக்கீடு செய்யவுள்ளோம் என்றார் அவர்.

சிலாங்கூருக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று அம்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகை புரிந்த மந்திரி புசார் புகே பெர்டானா பள்ளிவாசல் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் நேரில் கண்டறிந்தார்.

இந்த மேம்பாலம் கட்டப்படுவதன் மூலம் பள்ளிவாசலுக்குச் செல்ல விரும்புவோர் கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை வழியாகச் நீண்ட தொலைவு சென்று மீண்டும் ‘யு‘ திருப்பத்தில் திரும்பி வரவேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே,  மாநில அரசினால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் கல்வியமைச்சு விரைவில் பள்ளியைக் கட்டும் எனத்  தாம் எதிர்பார்ப்பதாகவும் அமிருடின் குறிப்பிட்டார். யுகே பெர்டானா மற்றும் புக்கிட் அந்தாராபங்சாவுக்கு இடையில் உள்ள அந்த நிலத்தில் பள்ளி நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :