SELANGORWANITA & KEBAJIKAN

வார இறுதியில் நான்கு இடங்களில் கோவிட்-19 பரிசோதனை- 4,000 பேர் இலக்கு

ஷா ஆலம், மார்ச் 5- நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தின் நான்கு இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் நான்காயிரம் பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கமாக வரும் சனியன்று சுபாங் பெர்டானா, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெறும் சோதனை இயக்கத்தில் ஆயிரம் பேர் வரை கலந்து பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

அதே தினத்தில் ஸ்ரீ கெம்பாங்கான், எம்.பி.பி.ஜே. மண்டபத்தில் மற்றொரு பரிசோதனை இயக்கம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோத்தா டாமன்சாரா, செக்சன் 2, பல்நோக்கு மண்டபத்திலும் ஷா ஆலம் செக்சன் 15, டாத்தாரான் ஆட்டோமோபில் வளாகத்திலும் பரிசோதனை இயக்கங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

ஒவ்வொரு பரிசோதனை இயக்கத்திலும் தலா ஆயிரம் பேர் வரை கலந்து பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு உதவும் வகையில் இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் தவறாது கலந்து பயன்பெறுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக screening.selangkah.my.  எனும் அகப்பக்கம் வாயிலாக தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கங்களின் வாயிலாக 4,352 பேர் பயன்பெற்றனர். அவர்களில் 32 பராமரிப்பு மையங்களைச் சேர்ந்த 894 முதியவர்களும் அடங்குவர்.

 


Pengarang :