NATIONALPress Statements

18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பதற்கான அனுமதியை ஒத்தி வைப்பதா? பக்கத்தான் கண்டனம்

ஷா  ஆலம், மார்ச் 26– பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் தகுதி வழங்குவது மற்றும இயல்பாக வாக்காளர்களாக பதிவு செய்வது ஆகியவற்றை அமல்படுத்துவதை ஒத்தி வைக்கும் நடவடிக்கை மக்களவை மற்றும் மேலவையின் முடிவுக்கு எதிரானது என பக்கத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி) தலைவர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்விரு அம்சங்களின் அமலாக்கத்தையும் தேர்தல் ஆணையம் இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் முதல்  தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறித்து தாங்கள் ஏமாற்றமடைவதாக அது கூறியது.

இந்நடவடிக்கை மக்கள் குரலை புறந்தள்ளும் வகையில் உள்ளதோடு இளைஞர்களின் உரிமைகளையும் மறுப்பதாக அமைந்துள்ளது என்று பக்கத்தான் தலைவர்கள்  கூட்டாக வெளியிட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒத்திவைப்பு நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் முழு பொறுப்பேற்க வேண்டும். இது பெரும் தோல்வியை புலப்படுத்துவதோடு மலேசிய அரசிலமைப்புச்  சட்டத்திற்கு புறம்பாகவும் அமைந்துள்ளது.

18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாமல் 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் 38 லட்சம் இளைஞர்களின் உரிமைகளை பறிக்கப்படும் என்பதோடு இளம் தலைமுறையினருக்கு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் செய்த பெரும் துரோகமாகவும் அமையும்.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதோடு சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாகவும் ஜனநாயக உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இச்செயல் இளைஞர்கள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தும். இந்த தோல்விக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் முழுபொறுப்பேற்க வேண்டும் என அந்த அறிக்கை தெரிவித்தது.

18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் திட்டத்தை ஏற்கனவே முடிவு செய்தபடி இவ்வாண்டு ஜூலை மாதம் 1 தேதிக்குள் அமல்படுத்தாதத வரை  15வது பொதுத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் அந்த பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் கூறியது.

கோவிட்-19 பெருந்தொற்று உள்பட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக இயல்பாக வாக்காளர்களாக பதிவு செய்வது மற்றும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிப்பது அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி சாலே கடந்த 25ஆம் தேதி கூறியிருந்தார்.

 


Pengarang :