ACTIVITIES AND ADSECONOMYYB ACTIVITIES

அரசாங்கம் உணவு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-கிள்ளான்  நாடாளுமன்ற உறுப்பினர் 

கிள்ளான் ஏப் 21- :தனது தொகுதியில்  ஏழை  மக்களுக்கு  கடந்த  ஆறு வாரங்களாக தொடர்ச்சியாக  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும்  காய்கறிகள் மற்றும் மீன்கள் விநியோகம் செய்து வருவதாக  கிள்ளான்  நாடாளுமன்ற உறுப்பினர்  சார்ல்ஸ் சந்தியாகோ  தெரிவித்தார்.

இத்திட்டம் தற்போதையை தொற்று நோய் சூழ்நிலையில் சுமார் ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் , கிள்ளான் வாழ் மக்களுக்கு உதவும் , முயற்சியின் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை  சீலியுங்  மற்றும் சூரியா பெண்டாமார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் காய்கறிகள் மற்றும் மீன்களை விநியோகம் செய்த பொழுது தன் மனதை உடைய வைத்த  கதையாக,  ஒரு நடுத்தர வயது மாதுவின்  துயரம்  இருந்ததாக   தெரிவித்தார்.

இந்த பெண் தன்னையும்,  நீரிழிவு நோயால் துன்புறும் தனது தாயையும் பாதுகாக்க தன் தூக்கத்தை தியாகம் செய்து இரவில் பகுதிநேரமாக பாதுகாப்பு காவலராக வேலை செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்.

இந்த  காலக்கட்டத்தில் அப்பெண்ணின் வருமானம் பாதியாக குறைக்கப் பட்டிருந்தாலும், அவருடைய தாயின் சிகிச்சை செலவுகள் இன்னும் அதிகமாக இருப்பதால், அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே வெறும் சோறு மற்றும் காய்கறிகளுடன் சாப்பிடுவதாகவும், சில நேரங்களில்  இருவரும் வயிற்றைக் கட்டி வாழ வேண்டிய சூழ்நிலை  ஏற்படுவதும் உண்டு என்றார்.

இவர் மட்டுமின்றி  கோவிட் 19  தொற்றுநோய் காலகட்டத்தில்    பெரும்பாலான ஏழைக் குடும்பங்கள், வேலையிழந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களும் இதே போன்ற சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். அதாவது சம சீரற்ற உணவுகளையே நம்பிவாழ வேண்டியுள்ளது.

காய்கறிகள், இறைச்சி, மீன் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவிலிருந்து விடுபட்டு அளவுக்கு அதிகமான கார்போஹைட்ரேட்டுகள் அல்லது மாவுச்சத்து  கொண்ட  உணவுகளை உட்கொள்ளும் நிலைக்கு  தள்ளப் பட்டுள்ளனர். இதற்கு ,  சத்தான உணவுகளின் உயர்ந்த விலைகளே காரணம் என்றார்  அவர்.

நெருக்கடியான இந்த காலகட்டத்தில், அடிப்படை உணவுகளின் விலையை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்,  வர்த்தகர்கள் விருப்பப்படி விலையை உயர்த்துவதைத் தடுக்க பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள்  ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும்  என்று,  பலமுறை  தான் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.

நீண்ட கால தீர்வாக,  சமூகத்தில் மேலோங்கி வளர்ந்து வரும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கு ஆழமான மற்றும் மிகவும் பயனுள்ள சமூக பாதுகாப்புக் கொள்கைகளை அமலுக்கு கொண்டு வர வேண்டும். உதாரணமாக, அரசாங்கம் ஏழைகளுக்கு உணவு பற்று சீட்டுகளை விநியோகிக்கலாம். இது  அவர்களின் உணவை மிகவும் நிலையான, சத்தான மற்றும் பாதுகாப்பான உணவு உட்கொள்ளும் சூழ்நிலைக்கு  கொண்டு வரமுடியும்.

பிரதமர் மொகிதீீீீீனின் பின் அரசாங்கம் இப்பொழுதே, மேற்படி குற்றச்சாட்டுகளைை  களைய  பாடு பட வேண்டும். அதன்  திறமையை நிரூபிக்க வேண்டும்  என்று சவால் விட்டார் அவர்.


Pengarang :