ECONOMYNATIONAL

ஆள்பலச் சந்தையின் சமநிலையற்றப் போக்கினால் வேலையில்லாப் பிரச்னை அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப் 22– சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளால் நாட்டின் ஆள்பலத் துறையில் கடந்தாண்டு ஏற்பட்ட சமநிலையற்றப் போக்கு வேலையில்லாப் பிரச்னை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த  2019ஆம் ஆண்டில்  3.3 விழுக்காடாக இருந்த வேலையின்மைப் பிரச்னை கடந்தாண்டு 4.5ஆக உயர்வு கண்டதாக மலேசிய புள்ளி விபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மஹிடின் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் மற்றும் பல நாடுகள் விதித்த கடுமையான நிபந்தனைகள் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முழுவதும் உலக ஆள்பலச் சந்தை நிலையற்றதாக இருந்தது. இதனால் வேலை இழப்பு, வேலை நேர குறைப்பு, வருமான இழப்பு  போன்ற பிரச்னைகளை தொழிலாளர்கள் எதிர்நோக்க வேண்டி வந்தது என்று அவர் சொன்னார்.

சுகாதார நெருக்கடியின் போது  மாதாந்திர வேலையின்மைப் பிரச்னை 3.9 முதல் 5.3 விழுக்காடு வரை இருந்தது. இது தவிர, வேலையில்லாதோர் எண்ணிக்கையும் இரண்டு லட்சமாக உயர்ந்தது என்றார் அவர்.

கடந்தாண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் கடுமையான எஸ்.ஒ.பி. நிபந்தனைகளுடன் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர வழங்கப்பட்ட அனுமதி சுகாதாரத்திற்கு பாதுகாப்பையும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மீட்சியுறுவதற்கு வாய்ப்பையும் ஏற்படுத்தியது என்று  அவர் மேலும் தெரிவித்தார்.

நிச்சயமற்ற சுகாதார சூழல் காரணமாக நாட்டின் ஆள்பலச் சந்தை இவ்வாண்டில் மிதமான அளவில் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :