ECONOMYPBTSELANGOR

இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்திற்கு 26 மையங்கள் அடையாளம் காணப்பட்டன

உலு கிளாங், ஏப் 12– தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக  சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 26 மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் சமூக மண்டபங்கள் ஆகியவை தடுப்பூசி மையங்களாக செயல்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டவுடன் இந்த மையங்கள் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும் என்று அவர் சொன்னார்.

சுகாதார பணியுடன் தொடர்புடைய பத்து மையங்களை இதுவரை அடையாளம் கண்டுள்ளோம். எனினும் நோயாளிகளை கவனிக்க வேண்டிய முக்கிய பணி மருத்துவமனைகளுக்கு உள்ளதால் இந்த விஷயத்தில் மருத்துவமனைகளை பெரிதும் சார்ந்திராமல் சமூக மண்டபங்களையும் தடுப்பூசி மையங்களாக பயன் படுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.

இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தை குறிப்பாக விநியோகப் பணிகளை கையாளும் பொறுப்பு மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சன்வே பிரமிட் மாநாட்டு மையத்தை தடுப்பூசி மையங்களில் ஒன்றாக பயன்படுத்தவிருக்கிறோம். இந்த மாநாட்டு மையத்தில் ஒரு நாளில் 8,000 பேர் வரை தடுப்பூசியைப் பெற முடியும். முதல் கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் நாளொன்றுக்கு1,000 பேர் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றனர் என்று அவர் விளக்கினார்.

தடுப்பூசியைப் பெறுவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு அந்த மையம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் எனினும், இது குறித்து ஒருங்கிணைப்பு  அமைச்சருடன் நடத்தப்படும் சந்திப்பில்தான் இறுதி முடிவெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்களப்பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்பட ஐந்து லட்சம் பேரை இலக்காக கொண்டு முதல் கட்ட தடுப்பூசித்  திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி  தொடங்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில்  முதியோர் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 94 லட்சம் பேர் தடுப்பூசியைப் பெறுவர்.


Pengarang :