ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இரத்த உறைவின் எதிரொலி -ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி அமெரிக்காவில் தற்காலிக நிறுத்தம்

வாஷிங்டன், ஏப் 14-  ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசியைப் பெற்ற 50 வயதுக்கும் குறைவான ஆறு பெண்களுக்கு இரத்தம் உறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த கோவிட்-19 தடுப்பூசியின் பயன்பாட்டை  சில நாட்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்க மத்திய சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது.

அந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்த இரத்த உறைவுப் பிரச்னை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதியை தாமதப்படுத்தவுள்ளதாக ஜோன்சன்& ஜோன்சன் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நால்வருக்கு இரத்த உறைவு ஏற்பட்ட விவகாரத்தை தாங்கள் ஆராய்ந்து வருவதாக ஐரோப்பிய ஒழுங்கு முறை அமைப்பு கூறியதைத் தொடர்ந்து அந்த தடுப்பூசி உற்பத்தி  நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவும்  ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தற்காலிக  தடை விதித்துள்ளது.

தடுப்பூசியின் பயன்பாட்டை சிறிது நாட்களுக்கு நிறுத்தி வைக்கத்  தாங்கள் முடிவெடுத்துள்ளதோடு அந்த இரத்த உறைவுப் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து சுகாதார அதிகாரிகளிடம் தகவல் பெறவுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் ஜெனட் வூட் கோக் கூறினார்.

இரத்த உறைவுப் பிரச்னைகளும் அதன் காரணமாக சில  மரணச் சம்பவங்களும் நிகழ்வதற்கும் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிக்கும் தொடர்பிருக்கும் சாத்தியம் உள்ளதாக ஐரோப்பிய மருந்து ஒழுங்கு  முறை அதிகாரிகள் முன்னதாக கூறியிருந்தனர்.

முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட கோவிட்-19 ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதில் ஒரு தடவை மட்டுமே செலுத்தக்கூடிய ஜோன்சன்& ஜோன்சன் தடுப்பூசியும்  குறைந்த செலவிலான அஸ்ட்ராஸேனோ தடுப்பூசியும் மிக முக்கிய ஆயுதங்களாக கருதப்படுகின்றன.

 


Pengarang :