ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

இ.சி.ஆர்.எல். திட்டம்-  வடக்கு வழித்தடம் 12 லட்சம் குடிநீர் பயனீட்டாளர்களை பாதிக்கும்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஏப் 13– கிழக்குக் கரை இரயில் திட்டம் (இ.சி.ஆர்.எல்.) வடக்கு தடத்தில் மேற்கொள்ளப்படும் பட்சத்தில்  கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள தொழில் துறைகள் உள்பட 12 லட்சம் ஆயர் சிலாங்கூர் பயனீட்டாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோம்பாக் மற்றும் செரெண்டாவை உள்ளடக்கிய அத்திட்டம் மாநிலத்தின் முக்கிய நீர் வளங்களாக விளங்கும் சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட் வழியாக செல்வதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களுக்கான நீர் தேவையில் 60 விழுக்காட்டை சுங்கை சிலாங்கூர் நிறைவு செய்யும் வேளையில் எஞ்சிய நீர் சுங்கை லங்காட்டிலிருந்து பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவ்விரு ஆறுகளும் மாசுபடும் பட்சத்தில் நாம் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும். முன்பு மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.டி., எல்.ஆர்.டி. மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களின் போது நாம் போதுமான அளவு படிப்பினையைப் பெற்றுள்ளோம் என்றார் அவர்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான கடனுதவித் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த இ.சி.ஆர்.எல். திட்டம் மேம்பாடைந்த நாடுகளின் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  மேற்கொள்ளப்பட்டாலும் சுற்றுச்சூழலுக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாகும் என்று அவர் மேலும் சொன்னார்.

இவ்வாறு நான் சொல்வது அனுபவத்தின் அடிப்படையிலே தவிர கணிப்பின் அடிப்படையில் அல்ல. எல்லா மேம்பாட்டுத் திட்டங்களும் சகதி வெள்ளம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். தெற்கு வழித்தடத்திலும் ஆறுகள் பாதிப்புறும் சாத்தியம் உள்ளது. எனினும் அதன் பாதிப்பு வடக்கு  வழித்தடம் அளவுக்கு மோசமானதாக இருக்காது என்றார் அவர்.

அந்த இரயில் திட்டத்திற்கு வடக்கு வழித்தடத்தை தேர்ந்தெடுக்கும் மத்திய அரசின் முடிவு மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :