ECONOMYPBTSELANGOR

எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறினால் ரமலான் சந்தை ரத்து- மந்திரி புசார் எச்சரிக்கை

கோம்பாக், ஏப் 15-  நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கத் தவறினால் ரமலான் சந்தைகளை மாநில அரசு ரத்து செய்யும் என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எச்சரித்துள்ளார்.

அண்மைய காலமாக அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்களை கருத்தில் கொண்டு மந்திரி புசார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

புதிய தொற்று மையங்கள் தோன்றும் இடங்களாக ரமலான் சந்தைகள் உருவாகக்கூடாது என்பதால் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை சந்தை ஏற்பாட்டாளர்களும் ஊராட்சி மன்றங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எஸ்.ஒ.பி. விதிமுறைகள் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கையில் இவ்வாண்டு ரமலான் சந்தைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் அச்சந்தைகள் ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

 கோம்பாக், தாமான் செலாசோவில் உள்ள இயக்கவாதி ஒருவரின் இல்லத்தில் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக,  மந்திரி புசாரும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவும் தாமான் கிரீன்வூட் ரமலான் சந்தைக்கு வருகை புரிந்ததோடு அங்கு உணவுப் பொருள்களையும் வாங்கினர்.

எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறுவோருக்கு ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் தங்கள் வசம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி குற்றப்பதிவு வழங்க வேண்டும் என்றும்  மந்திரி புசார் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலையும் புதிய  தொற்று மையங்களின் உருவாக்கத்தையும் தடுப்பதற்கு ஏதுவாக ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி விதிமுறைகளின் அமலாக்கத்தை  தீவிரமாக கண்காணிக்கும்படி ஊராட்சி மன்றங்களை மந்திரி புசார் வலியுறுத்தியிருந்தார்.


Pengarang :