ANTARABANGSAECONOMYNATIONAL

காலாவாதியான குடிநுழைவு வருகை அனுமதியை வைத்திருக்கும் அந்நிய நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

புத்ரா ஜெயா, ஏப் 13– காலாவதியான குடிநுழைவு வருகை அனுமதியை (சோஷியல் விசிட் பாஸ்) கொண்டிருக்கும் அந்நிய நாட்டினர் இம்மாதம் 21ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறத் தவறும் அந்நிய நாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஸைமி கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தாயகம் திரும்ப இயலாதவர்கள் தங்களின் வருகை அனுமதியை நீட்டிக்க விண்ணப்பிக்கலாம், எனினும் இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் தங்கள் நாட்டு தூதரகத்திடமிருந்து ஆதரவு கடிதத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தவறினால் அபராதம், கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கும் கடிதங்களை தங்கள் நாட்டு தூதரகங்களிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளதாக இங்கு தங்கியிருக்கும்  வெளிநாட்டினர் கூறியிருந்தனர்.

இவர்கள் அனைவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக  தாயகம் திரும்ப முடியாத நிலையில்   சோஷியல் விசிட் பாஸ் காலாவதியாகி இங்கேயே சிக்கிக் கொண்டவர்களாவர்.  

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சொந்த நாடு எதிர்நோக்கியுள்ள கடும் பாதிப்பு மற்றும்  விமானம் கிடைப்பதில்  ஏற்படும் சிரமம் போன்ற பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர்கள்  எதிர்நோக்குவதை தாங்கள் உணர்ந்துள்ளதாக கைருள் ஸைமி கூறினார்.

 எனினும், விசிட் பாஸ் காலாவதியானவர்கள் இங்கு தங்கியிருக்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை பலர் தவறாகப்பயன்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் மேற்கொண்ட அமலாக்க சோதனை நடவடிக்கைகளில்  பொழுபோக்கு மையங்கள், உடம்பு பிடி நிலையங்கள், விபசார மையங்கள் உள்ளிட்ட இடங்களில்  பலர் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

 

 

 

 


Pengarang :