ANTARABANGSASELANGORYB ACTIVITIES

கிரீன்வூட் ரமலான் சந்தையை நாளை தொடங்கி  4 நாட்களுக்கு மூட உத்ததரவு

ஷா ஆலம், ஏப் 21– கோம்பாக், கிரீன்வூட் ரமலான் சந்தையை நாளை தொடங்கி நான்கு நாட்களுக்கு மூட செலாயாங் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த சந்தையின் ஏற்பாட்டாளர்கள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வியாபாரிகள் இன்றைய வியாபாரத்திற்கு தேவையான உணவுப் பொருள்களை தயாரித்து விட்ட காரணத்தால் இச்சந்தையை மூடும் நடவடிக்கை நாளை தொடங்கி மேற்கொள்ளப்படுவதாக நகராண்மைக்கழகத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குநர்  முகமது ஜின் மசூட் கூறினார்.

1988ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் அந்த சந்தையை மூடுவது தொடர்பான அறிக்கை சந்தை ஏற்பாட்டாளர்களிடம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த சந்தையை மீண்டும் திறப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய  விதிமுறைகள் குறித்தும் ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது என்றார் அவர்.

வருகையாளர்களுக்கு  எண் வரிசைப்படி  நுழைவு அட்டைகள் வழங்கப்பட வேண்டும், சந்தையில் ஒரு வழி பாதை ஏற்படுத்த வேண்டும், 12 வயதுக்கும் குறைவான சிறார்கள் மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோரை சந்தையில் அனுமதிக்கக் கூடாது என்ற புதிய நிபந்தனைகளை சந்தை ஏற்பாட்டாளர்களுக்கு அரசாங்கம் விதித்துள்ளது.


Pengarang :