SELANGORUncategorized

கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசியை வைத்திருந்தவருக்கு 18 மாதச் சிறை

கோலாலம்பூர், ஏப்  21– கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசியை வைத்திருந்த குற்றத்திற்காக மெக்கனிக் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 18 மாதச் சிறைத்தண்டனை விதித்தது.

தமக்கு எதிரான குற்றச்சாட்டை இப்னு சினா (வயது 28) என்ற அந்த ஆடவர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி இஸ்ராலிசாம் சனுசி இத்தீர்ப்பை வழங்கினார். அவ்வாடவர் கைது செய்யப்பட்ட தினமான மார்ச் 26ஆம் தேதியிலிருந்து இத்தண்டனை அமலுக்கு வருவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

அந்த கைப்பேசி கும்பலால் கொள்ளையடிக்கப்பட்ட பொருள் எனத் தெரிந்தும் அல்லது தெரிந்திருப்பதற்கான சாத்தியம் இருந்தும் கடடிட நிர்வாகியான அபு பாக்கார் சே மாட் (வயது 63) என்பவருக்கு சொந்தமான அந்த கைப்பேசியை நேர்மையற்ற முறையில் வைத்திருந்ததாக இப்னு மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி ஜாலான் தெங்கா , ஜாலான் கோம்பாக் எனும் முகவரியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததது. கூடுதல் பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 412வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

கடந்த  ஜனவரி 6ஆம் தேதி அபு பாக்கார் சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் அந்த கைப்பேசியை பறித்துச் சென்றதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

 


Pengarang :