ECONOMYNATIONAL

கோவிட் – 19 தடுப்பூசி வாங்க  பெட்ரோலிய  அறக்கட்டளை நிதியை அரசு பயன்படுத்துகிறது

கோலாலம்பூர், ஏப் 22 – கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை முடுக்கி விடுவதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்களிப்புகளிலிருந்து பெறப்பட்ட நிதியை தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு பயன்படுத்த அனுமதியளிக்கும் புதிய அவசரகால சட்டத்தை அரசாங்கம் நேற்று இயற்றியது. 

தேசிய அறக்கட்டளை நிதியின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் நிதியில்  1,740 கோடி வெள்ளியை தொற்று நோய்த் தடுப்பு மருந்து வாங்குவதற்கு பயன்படுத்த  இந்த அவசரகாலச் சட்டம் வகை செய்கிறது.

நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் மற்றும் இதர பெட்ரோலிய நிறுவனங்களின் பங்களிப்பைக் கொண்டு இந்த அறக்கட்டளை நிதி ஆரம்பிக்கப்பட்டது.  நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் மாநில அரசுகளுக்கு கடன் வழங்குவதற்கும் நிதி வழங்குவதை இந்த அறக்கட்டளை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.

பெட்ரோனாஸ் நிறுவனம் ஏற்கனவே தனது வருடாந்திர நிதியளிப்பை அரசாங்கத்திற்கு வழங்கி விட்டது. இவ்வாண்டிற்கான தொகையாக 1,800 கோடி வெள்ளியை அது வழங்கியுள்ளது.

கோவிட்- 19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா  ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா கடந்த ஜனவரி மாதம் நாட்டில் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்தார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இடைக்காலச் சட்டங்களை இயற்றும் அளவுக்கு விரிவாக அதிகாரத்தை இச்சட்டம் அரசாங்கத்திற்கு வழங்கியது.

நாட்டின் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கான பட்ஜெட்டை பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கடந்த மார்ச் மாதம்  இரு மடங்கு அதிகரித்து 500 கோடி வெள்ளியாக ஆக்கினார்.

இத்திட்டத்தின் வழி நாட்டிலுள்ள 3 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

 


Pengarang :