ECONOMYPress StatementsSELANGOR

கோவிட்- 19 நோய்த் தொற்றைத் தடுக்க ரமலான் சந்தைகளில் கடுமையான விதிமுறை அமல்

ஷா ஆலம், ஏப் 20- ரமலான் சந்தைகளில் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை நேற்று தொடங்கி கட்டங் கட்டமாக அமல்படுத்தும் நடவடிக்கையில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டுள்ளது.

அச்சந்தைகளில் ஜனநெரிசலை தவிர்க்கும் விதமாக ஒரு வழிப்பாதையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட புதிய எஸ்.ஒ.பி. நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு  எண்கள் பொறிக்கப்பட்ட நுழைவு அட்டைகளை விநியோகிப்பது மற்றும் உணவுப் பொருள்கள் வாங்கும் நேரத்தை கட்டுப்படுத்துவது போன்ற நடைமுறைகளும் அமல்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரமலான் சந்தையின்  முதல் ஐந்து நாட்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் பல சந்தைகள் கூடல் இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யத் தவறிவிட்டது தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

ரமலான் சந்தைக்கு வருவோரின் விபரங்களை பதிவு செய்ய உதவும் செலங்கா அல்லது மைசெஜாத்ரா செயலியை  பலர் ஸ்கேன் செய்யத் தவறியுள்ளனர். மேலும் சிலர் 12 வயதுக்கும் குறைவான சிறார்களை சந்தைக்கு அழைத்து வந்துள்ளனர் என்று அவர்  தெரிவித்தார்.

புதிய எஸ்.ஒ.பி. விதிமுறைகள் குறித்து நேற்று தொடங்கி ரமலான் சந்தை ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கப்பட்டு வருவதாகவும் விதிறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :