ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

சாயத் தொழிற்சாலையில் தீவிபத்து-  பாத்தாங் பெனார் ஆற்றில்  தூய்மைக்கேடு  தவிர்க்கப்பட்டது

ஷா ஆலம், ஏப் 13– நெகிரி  செம்பிலான், நீலாய் 3 இல் உள்ள சாயத் தொழிற்சாலையில்  நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீவிபத்தினால் அம்மாநிலத்திலுள்ள பாத்தாங் பெனார் ஆற்றில் தூய்மைக்கேடு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது,

இந்த தீவிபத்தின் எதிரொலியாக பாத்தாங் பெனார் ஆற்றில்  தூய்மைக்கேடு  ஏற்பட்டுள்ளதாக லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்திற்கு தகவல் கிடைத்தாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லுவாஸ்  அதிகாரிகள் வெள்ளை நிறத்திலான நீர் நீலாய் இம்பியான், தாசேக் உஜானா வழியாக பாத்தாங் பெனார் ஆற்றை நோக்கிச் செல்வதை கண்டதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

சாயத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீணையை அணைக்கும்  நடவடிக்கை காரணமாக அந்த வெள்ளை நிறத்திலான நீர் ஆற்றில் கலந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதனால் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு இவ்விவகாரம் மீது விரிவாக விசாரணையை லுவாஸ் முடுக்கி விட்டதோடு நீர் மாசுபடுவதை தடுப்பதற்கான நடடிவக்கைகளையும் மேற்கொண்டது என்றார் அவர்.

பாத்தாங் பெனார் ஆற்று நீர் மாசுபடுவதை தவிர்க்கும் முயற்சியாக அதிகாரிகள் அந்த ஆற்றில் பத்து மூட்டை கரித்தூளை கலந்தனர். இந்த துரித நடவடிக்கை காரணமாக  சுங்கை  செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்படுவது தவிர்க்கப்பட்டதோடு நீர் விநியோகத் தடை ஏற்படும் அபாயமும் தடுக்கப்பட்டது என அவர் மேலும் சொன்னார்.

சிலாங்கூரில் பாதுகாப்பான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக  லுவாஸ் இதர நிறுவனங்களுடன் இணைந்து அணுக்கமாக கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 


Pengarang :