NATIONAL

தடுப்பூசி பெற பெற்றோரை அழைத்துச் செல்வோர் எல்லை கடக்கலாம்

சிரம்பான், ஏப் 15- கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு தங்கள் பெற்றோர்கள் அல்லது தங்களைச் சார்ந்துள்ளவர்களை அழைத்துச் செல்பவர்கள் மாநில எல்லைகளை கடக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கும் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது இந்த அனுமதி வழங்கப்படும் என்று கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டதாக கூறிய அவர், எல்லைகளைக் கடப்பதற்கு தங்கள் பெற்றோர் அல்லது தங்களைச்  சார்ந்துள்ளவர்களின் தடுப்பூசிக்கான சந்திப்பு முன்பதிவு கடிதத்தை போலீசாரிடம் காட்டினால் போதுமானது என்றார்.

தங்கள் பெற்றோர்கள், தங்களைச்  சார்ந்துள்ளவர்கள், நோயுற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.

சிரம்பான் நகராட்சி மன்றத்தில் உள்ள நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கான தடுப்பூசி மையத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :