ANTARABANGSAHEALTHNATIONALWANITA & KEBAJIKANYB ACTIVITIES

தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள்  எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப் 29- நாட்டில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் திடீர் அதிகரிப்பை கண்டுள்ளது.

இதன் காரணமாக புதிய நோயாளிகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக மலேசிய தனியார் மருத்துவமனைகளின் சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் குல்ஜிட் சிங் கூறினார்.

கோவிட்-19 நோயாளிகளுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட படுக்கைகள்  தவிர்த்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளும் இந்நோயாளிகளால் நிரம்பி விட்டதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோயாளிகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தனியார் மருத்துவமனைகள் போதுமான படுக்கைகள் மற்றும் தீவிர  சிகிச்சைப் பிரிவு வசதிகளை கொண்டிருக்கவில்லை. மேலும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறையும் புதிய நோயாளிகளை ஏற்பதில் கட்டுப்பாட்டை விதிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார் அவர்.

மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை பொதுமக்கள் கடுமையான விஷயமாக கருத வேண்டும் என்பதோடு நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக எஸ்.ஒ.பி. நிபந்தனைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான படுக்கைகளும் ஆக்சிஜனும் இல்லாத காரணத்தால் மருத்துவமனைகள் மூடப்படுமோ என்பதுதான் தங்களின் மிகபெரிய கவலையாகும் என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு  அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக அங்குள்ள இதர நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பும் திட்டத்தை பரிசீலிக்கும்படியும் குல்ஜிட் சிங் கேட்டுக் கொண்டார்.

தனியார் மருத்துவமனைகளில்  நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு உணடாகும் செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்வது தொடர்பில் கடந்தாண்டில் உடன்பாடு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :