ANTARABANGSANATIONALPress Statements

நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க கண்காணிப்பு கேமரா, டிரோன் பயன்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஏப் 20– நாட்டின் எல்லைகளை குறிப்பாக மலேசியா-தாய்லாந்தை ஒட்டியப் பகுதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) மற்றும் டிரோன் போன்ற  தொழில்நுட்ப வசதிகளை போலீஸ் துறை பயன்படுத்தவுள்ளது.

கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தும் அணுகுமுறை தற்போது நடப்பில் இருந்த போதிலும் அது பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் புசார் பகுதியில் ஆறு கிலோ மீட்டர் பகுதியை மட்டுமே உள்ளடக்கியுள்ளதாக  புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹிம் ஜாபர் கூறினார்.

நாட்டின் எல்லை நெடுகிலும்   கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதால் ஊடுருவல் அதிகம் நிகழும் பகுதிகளில் மட்டுமே அத்தகைய வசதிகளை ஏற்படுத்துவது குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களில் பதிவான காட்சிகள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு படையினரே துணை போவதை சித்திரிக்கிறது. இதை ஊழல் தடுப்பு ஆணையம் பல ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருந்தது என்றார் அவர்.

டிரோன் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 500 வீரர்கள் அடங்கிய ஒரு பட்டாளத்தை பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.  குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களைக் கொண்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள முடியும் என்று அவர் பெர்னாமா டிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

டிரோன் கருவில் 24 மணி நேரமும் பறந்த எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும். அங்கு நிகழும் சம்பவங்கள் நடவடிக்கை அறைக்கு அனுப்பப்பட்டு அடுத்த கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சி.சி.டி.வி. மற்றும் டிரோன் தவிர்த்து கடல் எல்லைகளை குறிப்பாக சபா பகுதிகளை கண்காணிக்க ராடார் சாதனம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்  சொன்னார்.


Pengarang :