ECONOMYPENDIDIKANSELANGOR

நான்காவது அலையைத் தடுக்க பெட்டாலிங்கில் கோவிட்-19 பரிசோதனை

கிள்ளான், ஏப் 21-கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெட்டாலிங் மாவட்டத்தில் பல பள்ளிகள் மூடப்பட்டதை கருத்தில் கொண்டு அம்மாவட்டத்தை இலக்காகக் கொண்டு இலவச  பரிசோதனை இயக்கத்தை நடத்த சிலாங்கூர் அரசு முடிவெடுத்துள்ளது.

அந்த  நோய்த் தொற்றுக்கு காரணமானவர்களை அடையாளம் காண்பதற்கும் கோவிட்-19 நான்காவது அலை ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏதுவாக இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நோய்ப் பரவல் சாத்தியம் அதிகம் உள்ள இடங்களை இலக்காக் கொண்டு இலவச  பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள கடந்த ஞாயிறன்று கூடிய தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நோய்த் தொற்றுப் பரவலுக்கு காரணமானவர்களை முன்கூட்டிய அடையாளம் காண்பதன் வாயிலாக நான்காவது அல்லது ஐந்தாவது நோய்ப்பரவல் அலை உண்டாவதை தடுப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

கிள்ளான் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் 50,000 பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ள மாநில அரசாங்கம், இந்நோக்கத்திற்காக 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :