ECONOMYNATIONALPENDIDIKAN

பி.டி.பி.ஆர், டிடேக் டிவி பிரச்னைகளைக் கையாள்வதில் ஓரிட மையமாக பி.பி.டி. செயல்பட பரிந்துரை

கோலாலம்பூர், ஏப் 22- வீட்டிலிருந்து கல்விக் கற்றல் (பி.டி.பி.ஆர்.) திட்டம் மற்றும் கல்வியமைச்சின் டிடேக் டிவி ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய ஓரிட மையங்களாக மாவட்ட கல்வி இலாகாக்களை கல்வியமைச்சு நியமிக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பு மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இத்திட்டங்களில் பிரச்னையை எதிர்நோக்கும் பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ளவும் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மேலிடத்திற்கு கொண்டுச் செல்லவும் பொருத்தமான துறையாக மாவட்ட கல்வி இலாகாக்கள் விளங்குகின்றன என்று அந்த மன்றத்தின் தலைவர் இணைப் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது அலி ஹசான் கூறினார்.

வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் மற்றும் டிடேக் டிவி தொடர்பான பிரச்னைகளை தேசிய அல்லது மாநில நிலையில் அல்லாமல் மாவட்ட நிலையில் தீர்ப்பதற்கு ஏதுவாக திறன் பெற்ற பணியாளர்களைக் கொண்டு நிர்வகிக்கும் வகையில் மாவட்ட அளவில் சிறப்பு தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர்  பரிந்துரைத்தார்.

உட்புறப்பகுதிகளில்  வசிக்கும் பெற்றோர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையும். பெற்றோர்களை எளிதில் சந்திப்பதற்குரிய வாய்ப்பினைக் கொண்ட மாவட்ட கல்வி இலாகாக்கள் பிரச்னைகளை எளிதில் மேல் மட்டத்திற்கு கொண்டுச் செல்ல முடியும் என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படும் பட்சத்தில் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்வதில்  ஏற்படும் பிரச்னைகளைக் களைவதற்கான தயார் நிலை தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :