ECONOMYSELANGOR

லுவாஸ் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் நீர் தூய்மைக்கேடு தவிர்க்கப்பட்டது- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஏப் 15- நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள பாத்தாங் பெனார் ஆற்றில் ஏற்பட்ட தூய்மைக்கேட்டை  லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர்  நிர்வாக வாரிய அதிகாரிகள் உடனயாக கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தால் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது.

சாயத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஏற்பட்ட இந்த மாசுபாடு சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த துரித நடவடிக்கையின் வழி சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது. இதன் வழி சிலாங்கூர் மாநில மக்களுக்கு சுத்தமான நீர் இடையூறுன்றி கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த திங்களன்று நீலாய் 3இல் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பாத்தாங் பெனார் ஆற்றில் வெள்ளை நிற திரவம் கலந்தது. இத்தகவலை அறிந்த லுவாஸ் அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாஜாம் ஆறு, பெரேனாங் ஆறு மற்றும் செமினி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் டோன் எனப்படும் நீரில் கலந்துள்ள வாடையின் அளவை கண்டறியும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அச்சோதனையில் டோன் அளவு சுழியத்தை காட்டியது. ஆற்று நீர் மாசுபடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக ஆற்றில் கரித் தூள் அடங்கிய பத்து மூட்டைகளை அடுக்கினர்.


Pengarang :