MEDIA STATEMENTNATIONAL

இந்தியா சென்று வர சரக்கு விமானங்களுக்கு மட்டுமே அனுமதி

புத்ரா ஜெயா, மே 3- இந்தியா மற்றும் மலேசியாவுக்குடையே சேவையில் ஈடுபட சரக்கு விமானங்களுக்கு மட்டுமே கடந்த மாதம்  28ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர்  டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.

அந்த தேதியிலிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் அந்நாட்டிற்கு செல்வதற்கும் அங்கிருந்து நாடு திரும்புவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின்  தலைமையில் நடைபெற்ற தேசிய  பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிலிருந்து வரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதாக வெளிவந்த தகவல்கள் குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

எம்.எச். என்ற எழுத்து பொறிக்கப்பட்ட விமானச் சேவை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய செய்திகளை சுட்டிக்காட்டிய அமைச்சர், அவை சரக்கு சேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் விமானங்களாகும் என்றார்.

பயணிகள் விமானங்களை  சரக்கு  விமானங்களாக மாற்றி சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை  கோவிட்-19 நோய்த் தொற்று பரவியது முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெளிவுபடுத்தினார்.

மலேசியாவில் பணிபுரியும் இந்த பிரஜை ஒருவர் செல்லத்தக்க ஆவணங்களுடன்  மலேசியா வந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த அவர், அச்சம்பவம் ஏப்ரல் 10ஆம் தேதிக்கு முன்னதாக நிகழ்ந்ததை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியதாச் சொன்னார்.


Pengarang :