PBTSELANGOR

கோவிட்-19 நோய் அபாயம் அதிகம் உள்ள இடங்கள் குறித்த பட்டியல் வெள்ளியன்று வெளியீடு

புத்ரா ஜெயா, மே 5- கோவிட்-19 நோய் அபாயம் அதிகம் உள்ள  மையங்கள் குறித்த பட்டியலை “ஹைட்” எனப்படும் நோய்த் தொற்று அபாய முன்னெச்சரிகை  முறைத் திட்டத்தின் வாயிலாக வரும் வெள்ளியன்று வெளியிட அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அண்மையகாலமாக அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இதன் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக  தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

சம்பந்தப்பட்ட வர்த்தக மையங்களில் புதிய தொற்று மையங்கள் தோன்றுவதை தடுப்பதற்கு ஏதுவாக  அதன் உரிமையாளர்களும் பொது மக்களும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த பட்டியல் வெளியீடு துணை புரியும் என்று அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட மையங்களை “வெப்பத் திட்டு” பட்டியலில் வைப்பதன் மூலம் மிகப்பெரிய  தொற்று மையம் உருவாகும் சாத்தியத்தை தடுக்கவும் இயலும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இது போன்ற பட்டியலை கொண்டிருப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்ப்பது உள்ளிட்ட சுயக்கட்டுப்பாட்டு நடவடிக்கைளை மேற்கொள்ள வழி வகுக்கும் என்றார் அவர்.

மைசெஜாத்ரா செயலியில் உள்ள தரவுகளைக் கொண்டு இந்த ஹைட் முறையை பேங்க் நெகாரா மலேசியாவும் சுகாதார அமைச்சும் மேம்படுத்தியுள்ளன. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நோய் அபாயம் மிகுதியாக உள்ள பகுதிகள் குறித்த எச்சரிக்கையை இந்த முறையின் கீழ் பெற முடியும்.


Pengarang :