ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 வரலாற்றில் அதிகப்பட்ச எண்ணிக்கை- தீவிர சிகிச்சைப் பிரிவில் 506 நோயாளிகள்

ஷா ஆலம், மே 8- நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நேற்று வரை 506 கோவிட்-19 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பெருந்தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் பதிவான அதிகப்பட்ச எண்ணிக்கை இதுவாகும்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் நோய்க்கான பரிசோதனை மேற்கொள்வோரும் இதில் அடங்குவர் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 295 பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த இரு வாரங்களைக் காட்டிலும் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 44 விழுக்காடு அதிகரித்துள்ளது. சிலாங்கூர், கோலாலம்பூர், கிளந்தான், சரவா ஆகிய மாநிலங்களில் இந்நோயாளிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது என்றார் அவர்.

22 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்  கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 70 விழுக்காடாகவும் சில மருத்துவமனைகளில்  90 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது என அவர் கூறினார்.

கோவிட்-19 நோயாளிகள் அல்லாத மருத்துவமனைகளும் அந்நோய் கண்டவர்களுக்கு குறிப்பாக செயற்கை சுவாசக் கருவி தேவைப்படுவோருக்கு சிகிச்சையளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. கோவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதே இதற்கு காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெருநாள் காலம், தடுப்பூசித் திட்டம் இன்னும் விரிவான அளவில் மேற்கொள்ளப்படாதது மற்றும் நெரிசல்மிக்க மக்கள் தொகை ஆகிய காரணங்களால் மருத்துவமனைகள் மேலும் அதிகமான நோயாளிகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :