ECONOMYNATIONAL

சாலைத் தடுப்புகளில் 1,333 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

குவாந்தான், மே 11- கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முறையான ஆவணங்கள் இன்றி மாநில எல்லைகளைக் கடக்க முயன்ற 1,333 வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹிம் ஜாபர் கூறினார்.

ஒரு சிலர் காவல் துறையின் கையெழுத்து மற்றும் ரப்பர் முத்திரை இல்லாத அனுமதி பாரங்களைக் காட்டி எல்லைகளைக் கடக்க முயன்றதாகவும் அவர் சொன்னார்.

ஒரு சிலர் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்கவும் போலீசார் பாரத்தில் உள்ள குறைபாடுகளை கவனிக்காமல் விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள தஞ்சோங் லும்புரில் சாலைத் தடுப்புச் சோதனையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை கடப்பதற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று தொடங்கி 361 சாலைத் தடுப்புகள் நாடு முழுவதும் போடப்படுகின்றன. இந்த சாலைத் தடுப்புகளில் 6,500 போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் அவர்.

எல்லை கடப்பதற்கு வேலை அனுமதி கடிதங்களைப் பயன்படுத்துவது உள்பட பல்வேறு தந்திரங்களை வாகனமோட்டிகள் கையாள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :