ECONOMYHEALTHNATIONAL

பொது முடக்கம்- அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம்- பொதுமக்களுக்கு பேரரசர் அறிவுறுத்து

கோலாலம்பூர், மே 11- நாட்டில் நாளை தொடங்கி அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவசியம் இருந்தாலன்றி வெளியில் செல்வதை தவிர்க்கும்படி மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நடவடிக்கையின் மூலம் கோவிட்-19 நோய்ப் பரவலை தடுப்பதில் ஆக்ககரமான பயனை கொண்டு வர முடியும் என்று  பேரரசர் நம்புவதாக  இஸ்தானா நெகாராவின் சிறப்பு அதிகாரி டத்தோ அகமது ஃபாடில் சம்சுடின் கூறினார்.

தங்களின் சுகாதாரத்தையும் குடும்ப உறுப்பினர்களின் சுகாதாரத்தையும் பேணிக்காப்பதற்கு ஏதுவாக தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளையும் உத்தரவுகளையும் முறையாக பின்பற்றி நடக்கும்படி அண்மையில் விடுத்த வேண்டுகோளை பேரரசர் மீண்டும் நினைவுறுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஐரேப்பா மற்றும் தெற்காசியாவின் சில நாடுகளில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 சுனாமி போன்ற நிலை இங்கு வரக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு மாமன்னர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ளபடி மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதை பொதுமக்கள் முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்று பேரரசரின் நினைவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :