ALAM SEKITAR & CUACANATIONAL

முழு அளவில் பொது முடக்கத்தை அமலாக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை

ஜெராண்டூட், மே 8– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நாடுமுழுவதும் அமல்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் தற்போதைக்கு கொண்டிருக்கவில்லை. மாறாக, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அத்திட்டம் தொடரப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

‘ஹைட்‘ எனப்படும் நோய்த் தொற்று அதிகம் உள்ள வெப்பத் திட்டுப் பகுதிகளை அடையாளம் காணும் முறையின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த முடியும் என்று அவர்  சொன்னார்.

நோய்த் தாக்கம் அதிகம் உள்ள வெப்பத் திட்டுகள் அடையாளம் காணப்பட்டால் அந்த கிராமம் அல்லது மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியில் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை அமல் செய்வோம் என்றார் அவர்.

இருந்த போதிலும் நம்மையும் மீறி எதுவும் நடப்பதற்குரிய சூழல் உள்ளது. முறையான தடுப்பு நடவடிக்கைள் அமல்படுத்தப்படாவிட்டால்  நோன்பு பெருநாளுக்குப் பின்னர் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 5,000 ஆகவும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களில் 10,000 ஆகவும் அந்த அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது என்று அவர் சொன்னார்.

இன்று கூடிய தேசிய பாதுகாப்பு  மன்றத்தின் நுட்பக் குழு கூட்டத்தில், நோன்பு பெருநாளன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும் சாத்தியம் குறித்து ஆராயப்பட்டதாகவும் அதன் தொடர்பான முடிவுகள் இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :