ANTARABANGSAMEDIA STATEMENT

வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள மலேசியர்கள் தாயகம் கொண்டு வரப்படுவர்

கோலாலம்பூர், மே 7- இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அபரிமிதமாக உயர்வு கண்டு வருவதைத் தொடர்ந்து அந்நாட்டின் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள மலேசியர்களை தாயகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு வாடகை விமானம் மூலம் அவர்களை தாயகம் கொண்டு வரும் பணி தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் வாயிலாக மேற்கொள்ளப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹூசேன் கூறினார்.

சிறப்பு வாடகை விமானங்களை தரையிறக்குவது உள்பட அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டப் பின்னர் புது டில்லி மற்றும் மும்பைக்கு விமானங்கள் அனுப்படும் என்று அவர் சொன்னார்.

இந்தியாவிலுள்ள மலேசிய   தூதரகம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டிலுள்ள மலேசியர்களை தாயகம் கொண்டு வருவதற்கான முடிவை இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து துறைகளும் கூட்டாக எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அங்குள்ள மலேசிய அரசு நிறுவனங்களின் பணியாளர்களான அவர்கள் தாயகம்  புறப்படும் முன் இந்தியாவிலும் தாயகம் திரும்பியப் பின்னர் இங்கும் கோவிட்-19 பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் 14 நாள்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதால் மலேசியர்களை தாயகம் கொண்டு வரும் நடவடிக்கையில் அவ்விரு பிரதேசங்களும் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்விரு பகுதிகளிலும் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விஸ்மா புத்ரா  சென்னையில் உள்ள  தூதரக அதிகாரி வாயிலாக அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் ஹிஷாமுடின் கூறினார்.


Pengarang :