ECONOMYPBTSELANGOR

ஷா ஆலம் வட்டாரத்தில் ஐந்து இடங்களில் சாலைத் தடுப்புச் சோதனை

ஷா ஆலம், மே 11- ஷா ஆலம் மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு நிரந்தர சாலைத் தடுப்பு சோதனையும் நான்கு நடமாடும் சாலைத் தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இம்மாதம் 6ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சாலைத் தடுப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ஷா ஆல மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.

புக்கிட் ஜெலுத்தோங் டோல் சாவடியின் ஷா ஆலம் நுழைவாயில் பகுதியில் ஒரு நிரந்தர சாலைத் தடுப்பு ஏற்பட்டுத்தப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய நான்கு சாலைத் தடுப்புகள் தேவையான இடத்தில் தேவைப்படும் நேரத்தில் ஏற்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

அந்த நான்கு சாலைத் தடுப்புச் சோதனைகளையும் ஷா ஆலம் போலீஸ் தலைமையகத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ மூடா போலீஸ் நிலையம், செக்சன் 9 போலீஸ் நிலையம், செக்சன் 6 போலீஸ் நிலையம் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் போலீஸ் நிலையம் ஆகியவை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் மத்தியில் எஸ்.ஒ.பி. நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய 10க்கும் மேற்பட்ட குழுக்களும் நோன்பு பெருநாள் காலத்தில் குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் ஜெலுத்தோங் சாலைத் தடுப்புச் சோதனையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த எஸ்.ஒ.பி. கண்காணிப்பு மற்றும் நோன்புப் பெருநாள் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 26 அதிகாரிகளும் 147 போலீஸ்காரர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :