ECONOMYHEALTHNATIONAL

ஆலோசக சேவை மையம் உருவாக்கம்- சிலாங்கூரை மற்ற மாநிலங்கள் முன் மாதிரியாக கொள்ள வேண்டும்

ஷா ஆலம், ஜூன் 14– ஆலோசக சேவை மையத்தை உருவாக்குவதில் சிலாங்கூரை மற்ற மாநிலங்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன.

பொது மக்கள் நேரடியாக அல்லது தொலைபேசி வாயிலாக  ஆலோசக சேவையைப் பெற வகை செய்யும் இத்தகைய திட்டத்தை அமல்படுத்தியதற்காக தாம் சிலாங்கூர் அரசை பெரிதும் பாராட்டுவதாக மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவ புலத்தின்  பொது சுகாதாரம், சமூக நலப் பிரிவின் மருத்துவ நிபுணர் இணைப் பேராசிரியர் டாக்டர் அஸ்மாவத்தி முகம்து நாவி கூறினார்.

தங்களின் மன அழுத்தத்தை வெளியில் சொல்வதற்கும் உரிய சிகிச்சைகளைப் பெறுவதற்கும் ஏதுவாக மன நல நிபுணர்கள் அல்லது மருத்துவர்களைச் சந்திக்க பலர் தயக்கம் காட்டுவதை நாம் அறிவோம்.இந்நிலையில்  சிலாங்கூர் ஆலோசக சேவை மையத்தை அமைக்கும் மாநில அரசின் முடிவு மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

மனநல மருத்துவர்களை சந்திப்பது  சமுதாயத்தில் தங்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணம் ஏற்படுவதற்குரிய சூழலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பலரது மத்தியில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிலாங்கூர் டிவியின் ஏற்பாட்டில் ‘நோய்த் தொற்று காலத்தில் மன அழுத்தம்- பொருளாதார அம்சம் கடும் விளைவுகளை ஏற்படுத்துமா?‘ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில மக்களுக்கு மனநல ஆலோசனைகளை இலவசமாக வழங்குவதற்காக ஆலோசக சேவை மையத்தை மாநில அரசு உருவாக்கியுள்ளது.

நாட்டில் 16 வயதுக்கும் மேற்பட்ட சுமார் ஐந்து லட்சம் பேர்  மனநோய் மற்றும் மன அழுத்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறியை கொண்டுள்ளதாக 2019ஆம் ஆண்டின் தேசிய சுகாதார மீதான ஆய்வொன்று கூறுகிறது


Pengarang :