ECONOMYHEALTHPBTSELANGOR

பொது முடக்க காலத்தில்  பீர் ஆலை செயல்படுகிறதா? ஷா ஆலம் போலீசார் மறுப்பு

ஷா ஆலம், ஜூன் 19– இங்குள்ள செக்சன் 15, பீர் தயாரிப்பு ஆலையில் கடந்த ஜூன் முதல் தேதி முதல் எந்த உற்பத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று மாலை 7.40 மணியளவில் தமது குழு அந்த ஆலையில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மதுபானங்கள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.

அந்த ஆலையின் புகைக் கூண்டு ஒன்றிலிருந்து புகை வந்ததற்கு கோதுமை அல்லது யீஸ்ட் மாதிரியான கச்சா பொருள்களை சூடு படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே காரணம் என்று அவர் சொன்னார்.

பொது முடக்கம் காரணமாக அந்த ஆலை மூடப்பட்டிருக்கும் போது அந்த தானியவகைகளை  சூடுபடுத்தாவிட்டால் அவை கெட்டுப்போய்விடும். அதே சமயம், அப்பணியை மேற்கொள்ளும் போது உண்டாகும் புகையை வெளியேற்றாவிட்டால் வெடிப்பு நிகழும் அபாயம் உள்ளது என்றார் அவர்.

‘தயாரிப்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்‘ என்று இந்த நடவடிக்கைக்கு பெயர். மது தயாரிப்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல்  அமைச்சின் அனுமதி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

செக்சன் 15 உள்ள அந்த மது ஆலையில் புகை வெளியாவதை அடிப்படையாக கொண்டு அந்த ஆலை செயல்படுவதாக கூறும் 40 விநாடி நேர காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.


Pengarang :