ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

போலி கோவிட்-19 மருந்து விற்பனை அதிகரிப்பு- 2,600 இணையத்தளங்கள் முடக்கம்

போலி கோவிட்-19 மருந்து விற்பனை அதிகரிப்பு- 2,600 இணையத்தளங்கள் முடக்கம்

 

புத்ரா ஜெயா, ஜூன் 13- அபாயரகமான மருந்துகளை விற்பனை செய்யும் 2,600 இணையத்தளங்களை அதிகாரிகள் முடக்கியுள்ளதோடு  22 லட்சம் வெள்ளி மதிப்பிலான பதிவு செய்யப்படாத மருந்துகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் பெங்கே XIV நடவடிக்கையில் இந்த மருந்துகளை கைப்பற்றப்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சுகாதார அமைச்சு, தேசிய மத்திய புலனாய்வு மையம்/இண்டர்போல் மலேசியா, அரச மலேசிய சுங்கத் துறை மற்றும் தொடர்பு மற்றும் பல்லுடக  ஆணையம் ஆகியவை இந்த அதிரடிச் சோதனை நடவடிக்கையில் பங்கேற்றதாக அவர் சொன்னார்.

 அபாயகரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை இலக்காக கொண்டு இச்சோதனை நடத்தப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்க்கான சிகிச்சையை மையப்படுத்தி செய்யப்படும் மருந்து விற்பனையை இலக்காக கொண்டு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில பொறுப்பற்றத் தரப்பினர் அதிக லாபம் ஈட்டுவதற்காக கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருள்களை விற்பனை செய்ய முனைகின்றனர் என்றார் அவர்.

அமலாக்கத் தரப்பிடம் அனுமதி பெறாமல் கட்டுப்படுத்தப்பட்ட கோவிட்-19  மருந்துகள், முகக்கவசங்கள், வெப்பமானி, கையுறை, அறுவை சிகிச்சை மேலங்கி, கோவிட்-19 பரிசோதனை உபகரணம் உள்ளிட்ட பொருள்கள் விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டத்திற்கு விரோதமான முறையில் மருத்துவ பொருள்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்ட  2,600 இணையத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :