Timbalan Presiden Pakatan Harapan Mohamad Sabu. Foto ASRI SAPFIE/SELANGORKINI
ACTIVITIES AND ADSHEALTHPBTSELANGOR

மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துவீர்- முகமது சாபு வலியுறுத்து

கிள்ளான், ஜூன் 2– பொதுமக்கள் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு ஏதுவாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்தும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் காணப்பட்ட பல நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டப் பின்னர் அதன் தாக்கம் குறைந்து காணப்படுவதாக கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாபு கூறினார்.

நாட்டில் இதுவரை ஐந்து விழுக்காட்டினருக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் இல்லாத போதிலும் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மந்தமாகவே செயல்படுகிறது. ஆகவே, அரசாங்கம் நிர்வாக நடைமுறைகளைக் குறைத்து தடுப்பூசி பெறுவதை எளிதாக்கும் வழிகளை ஆராய வேண்டும் என்றார் அவர்.

இங்குள்ள கிள்ளான் விளையாட்டு மையத்தில் சுங்கை காண்டீஸ் தொகுதி நிலையில் நடத்தப்பட்ட கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் தடுப்பூசி  மையத்திற்கு பலர் வரத் தவறியதாக வெளி வந்த செய்திகளை சுட்டிக்காட்டிய மாட் சாபு, தடுப்பூசி பெறுவதை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்வதில் சிலாங்கூர் மாநிலத்தை முன்மாதிரியாக கொள்ளும்படி மத்திய அரசை அவர் கேட்டுக் கொண்டார். இத்தகைய சோதனைகளின் வாயிலாக நோய்த் தொற்று உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த முடியும் என்றார்.


Pengarang :