Mangsa banjir membersikan semula kediaman mereka selepas air mulai surut di Jalan Reko Taman Hijau, Kajang pada 19 Julai 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

காஜாங் மற்றும் உலு லங்காட்டில் திடீர் வெள்ளம் !!!

காஜாங், ஜூலை 19:

வரலாறு காணாத வெள்ளத்தால், காஜாங் மற்றும் உலு லாங்காட் பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தால், வீட்டிலுள்ள பொருட்கள் உட்பட, முக்கியமான ஆவனங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களும் சேதமடைந்தன. தாமான் இண்டா, சுங்கை சுவா, ஜாலான் மென்டாலிங், காஜாங், ஜாலான் ரெகோ, தாமான் ஶ்ரீ இண்டா, தாமான் ஶ்ரீ ரெகோ, தாமான் பசிர் எமாஸ்,டேசா பூங்கா ராயா, தாமான் காஜாங் பாரு, மற்றும் ஶ்ரீ காஜாங் உட்பட 20-க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காஜாங்கில் வெள்ளம் ஏற்பட்டது.  இருப்பினும், நேற்று ஏற்பட்ட வெள்ளம் இங்குள்ள மக்களை நிலைகுலைய செய்திருப்பதாக தாமான் லாங்காட்டைச் சேர்ந்த காஜாங் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் புனிதா கனகரத்தினம் பெர்னாமாவிடம் தெரிவித்தார். இரவு 8.00 மணியளவில் அருகிலுள்ள கால்வாய் நீர் வீட்டில் நுழைந்தது. பின்னர் சிறிது நேரத்தில் நீர் மட்டம் முழங்கால் வரை அதிகரித்ததாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

முடிந்த வரையில் சில முக்கியமான பொருட்களை நீரில் சேதமடையாமல் காப்பாற்றிக் கொண்டாலும், விலை உயர்ந்த பொருட்களான கார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள் அனைத்தும் வெள்ள நீரால் சேதமடைந்துவிட்டதாக புனிதா விவரித்தார்.  திடீரென்று 10 நிமிடத்திற்குள் வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்ததால் சிறு பிள்ளைகளை செய்வதறியாது தவித்ததாக காஜாங் தாமான் ஶ்ரீ எமாஸ்சைச் சேர்ந்த காஜாங் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் வனிதா தங்கவேலு தெரிவித்தார்.

இந்த வெள்ளத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பெருமளவிலான பொருட்கள் குறிப்பாக குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரங்கள் என்று மின்சாரப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டதாக அவர் கூறினார். வெள்ள நீர் அதிகாலை 1.00 மணியளவில் வற்றத் தொடங்கிய நிலையில், வீடுகளில் சகதிகள் தேங்கி துர்நாற்றம் வீச தொடங்கிவிட்டதாக காஜாங் சுங்கை சுவாவைச் சேர்ந்த விக்னேஸ்வரி தெரிவித்தார்.

மேலும், பெரும்பாலான குடும்பங்களில் கைக்குழந்தைகள், சிறு பிள்ளைகளை வைத்துக் கொண்டு சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் பள்ளி மாணவர்கள் புத்தகங்களும் பொருட்களும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் செராஸ், சுங்கை செக்காமாட், பத்து 10 மற்றும் பத்து 13 சமூக மண்டபங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

–பெர்னாமா


Pengarang :