அம்பாங், ஜூலை 26:
பேராக் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உட்பட்ட சிலிம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்து விவாதிக்க, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான பெர்சத்து கட்சி முகாமுடன் செவ்வாய்க்கிழமை கெஅடிலான் கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி விலகிக் கொண்டது என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதுடன், எதிர்க்கட்சி முகாமில் எவ்வித பிளவுகளும் இல்லை என்பதை நிரூபிக்க இந்த சந்திப்பு வழிவகுக்கும் என்று பி.கே.ஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அம்பாங்கில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மக்கள் நீதிக் கட்சியின் தகவல் பிரிவின் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும், சிலிம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் போட்டியிடுவதை தாம் ஆதரிப்பதாக பெர்சத்துவின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறியிருப்பது குறித்து வெள்ளிக்கிழமை ஓர் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.