Uncategorized @ta

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவு பிரச்னை மீது தீவிரக் கவனம் தேவை டாக்டர் வேணுகோபாலன் வலியுறுத்து

ஷா ஆலம், செப் 7- மக்கள் குடியிருப்பு திட்ட வீடுகளில் (பி.பி.ஆர்.) வசிக்கும் குழந்தைகள் மத்தியில் காணப்படும் ஊட்டச்சத்தின்மை பிரச்னை மீது அனைத்துத் தரப்பினரும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலத் துணைச் சுகாதார இயக்குநர் டாக்டர் பி. வேணுகோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் பிரச்னை வெளிச்சத்திற்கு வராமல் மறைக்கப்பட்ட விஷயமாகவே இருந்து
வருவதாக அவர் சொன்னார். ஆற்றல் மிக்க நகரையும், திறன்மிக்க குடியிருப்பாளர்களையும் உருவாக்க வேண்டுமானால் குழந்தைகள்
மத்தியில் காணப்படும் ஊட்டச்சத்தின்மை பிரச்னைக்குத் தீர்வு காண்பது மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பி.பி.ஆர். குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் உண்ணும் உணவில் சமசத்தும்
ஊட்டச்சத்தும் குறைவாக உள்ளதாக ஈராண்டுகளுக்கு முன்னர் ஐ.நா.வின் சிறார் நிதியகம் வெளியிட்ட அறிக்கை கூறியதை டாக்டர் வேணுகோபாலன் சுட்டிக்காட்டினார்.
அந்த அறிக்கையைத் தொடர்ந்து கோத்தா டாமன்சாரா பி.பி.ஆர். குடியிருப்புகளில்
சுகாதாரத் துறை ஆய்வு மேற்கொண்ட போது அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள்
உண்மையானவை எனத் தெரிய வந்தது என்றார் அவர்.

இங்குள்ள செய்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். தங்கள் குழந்தைகளுக்குப் போதுமான சத்துணவு கிடைப்பதை உறுதி செய்யும் அளவுக்கு பெற்றோர்களின் நிதி நிலைமை வலுவாக இல்லை என்பதைத் தாங்கள் கண்டறிந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்குச் சத்துணவுகள் மிக முக்கியப் பங்கினை
ஆற்றுகின்றன. குழந்தைகள் பிற்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு ஆரம்பக் கால உணவு
அவர்களுக்கு இன்றியமையாததாக விளங்குகிறது என்றார் அவர்.


Pengarang :