Uncategorized @ta

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்திய சமூகம் தவறாது பங்கெடுக்க வேண்டும்

ஷா ஆலம், செப் 18- மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பை அரசாங்கம் தற்போது நடத்தி வருகிறது.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கணக்கெடுப்பு இம்முறை இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.  கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இயங்கலை எனப்படும் ஆன் லைன் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.

வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் போது அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று விபரங்களை பதிவு செய்வார்கள்.

இயங்கலை வாயிலாக இது வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில்   இந்திய சமூகத்தின் பங்கேற்பு மிகவும் குறைவாக உள்ளதாக அண்மையில் பெர்னாமா வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது

இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை இந்த கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானது. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு,சமூகவியல் துறைகளில் நமது உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கு நமது எண்ணிக்கையே அடித்தளமாக  விளங்குகிறது.

தொடக்கத்தில் பத்து விழுக்காடாக இருந்த இந்திய சமூகத்தின் மக்கள் தொகை இப்போது ஏழு விழுக்காடாக குறைந்து விட்டது.

இந்த கணக்கெடுப்பில் நாம் பங்கேற்கத் தவறினால் மக்கள் தொகையில் நம்மினம் குறைந்து போவதற்கு நாமே காரணம் ஆகிவிடுவோம்.  சுருங்கச் சொன்னால் இந்நாட்டில் நாம் இருந்தும் இல்லாதவர்கள் ஆகி விடுவோம்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மக்கள் தொகை  கணக்கெடுப்பை அலட்சியம் செய்வதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் நமது சந்ததியினரின் எதிர் காலத்தையும் பாழடித்து விடக்கூடாது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் அலட்சியம் வேண்டாம்.அதன் அவசியம் உணர்ந்து  உடனே பதிவு செய்வோம்.

 


Pengarang :