SELANGORUncategorized @ta

46 இடங்களில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

ஷா ஆலம், அக் 7-  சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து 46 இடங்களில் குடி நீர் விநியோகம் இன்று காலை 
வழக்க நிலைக்கு திரும்பியது.

மேலும் 228 இடங்களில் நீர் விநியோகத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தெரிவித்தது.

நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட பெட்டாலிங், கோல லங்காட், உலு லங்காட், சிப்பாங், புத்ரா ஜெயா ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8.00 மணி  வரை 17 விழுக்காடு நீர் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளதாக அது கூறியது.

கோல லங்காட் மாவட்டத்தில் 55 விழுக்காட்டு பகுதிகளும் பெட்டாலிங் மாவட்டத்தில் 37 விழுக்காட்டு பகுதிகளும் நீர் விநியோகத்தை பெறத் தொடங்கிவிட்டன. இதர மூன்று மாவட்டங்களுக்கு நீரை விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்நிறுவனம் தனது முக நூலில் குறிப்பிட்டுள்ளது.  

ஆற்றுத் தூய்மைக்கேடு காரணமாக மூடப்பட்ட சுங்கை செமினி சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 274 பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி வரை கட்டங் 
கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் நேற்று கூறியிருந்தார்.

நீர் தூய்மைக்கேடு காரணமாக சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 309,687 பயனீட்டாளர்கள் நீர் விநியோகத் தடையை எதிர் நோக்கி வருகின்றனர்.

Pengarang :