NATIONALSELANGORTOURISM

உள்ளூர் சுற்றுலா மையங்களுக்கு முன்னுரிமை அளிப்பீர்- சிலாங்கூர் மக்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், டிச 30- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுற்றுலா  மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா மேற்கொள்ள எண்ணம் கொண்டுள்ள சிலாங்கூர்வாசிகள் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மாநிலங்களைக் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்படாத போதிலும் மாநில மக்கள் உள்ளுரில் காணப்படும் சுற்றுலா மையங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

பெரும்பாலான மக்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றும்படி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றனர். கோவிட்- 19 நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வெளி மாநிலங்களுக்குச் சுற்றுலா செல்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது  என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தில் பல சிறந்த சுற்றுலா மையங்கள் உள்ளன. கோல சிலாங்கூரில் உள்ள ஸ்கை மிரர் சுற்றுலா மையத்தை குறிப்பிடலாம். இதன் வழி உள்ளூர் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் உதவ முடியும் என அவர்ர மேலும் சொன்னார்.

தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவுகள் அதிகரித்து வருவதானது சுற்றுலாத் துறை உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியதற்கான அறிகுறியாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :