NATIONALSELANGORTOURISM

முன்களப் பணியாளர்களுக்கு 3,000 சுற்றுலாப் பற்றுச் சீட்டுகள்- டூரிசம் சிலாங்கூர் வழங்குகிறது

ஷா ஆலம், ஜன 11- ‘சுற்றுலா செல்ல திட்டமா? முதலில் சிலாங்கூரை வலம் வாருங்கள்‘ எனும் இயக்கத்தின் கீழ் மூவாயிரம் பற்றுச் சீட்டுகள் முன்களப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இருநூறு வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச் சீட்டுகள் இம்மாதம் 8ஆம் தேதி லஸாடா செயலி வாயிலாக விநியோகம்  செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்பான டூரிசம் சிலாங்கூர் கூறியது.

மருத்துவர்கள், தாதியர்,  காவல் துறையினர், இராணுவத்தினர் போன்ற முன்களப் பணியாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அது தெரிவித்தது.

அதே தினத்தன்று பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட 2,000 பற்றுச்சீட்டுகளும் அதி விரைவில் தீர்ந்து விட்டன. சிலாங்கூர் மற்றும் வெளி மாநில மக்கள்  மத்தியில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் டூரிசம் சிலாங்கூர் கூறியது.

சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்  சிலாங்கூர் பொருளாதார மீட்சித் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான சுற்றுலா பற்றுச் சீட்டு உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

 


Pengarang :