ACTIVITIES AND ADSPBTSELANGOR

850 சிறு வியாபாரிகளுக்கு தற்காலிக வர்த்தக லைசென்ஸ்- சுபாங் ஜெயா மாநகர் மன்றம் வழங்கியது

சுபாங் ஜெயா, ஜன 18– கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் 850 தற்காலிக வர்த்தக லைசென்சுகளை கடந்தாண்டு வழங்கியது.

நோய்த் தொற்று பாதிப்பின் விளைவாக வருமானத்தை இழந்த குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினருக்கு உதவும் வகையில் இந்நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதாக  டத்தோ பண்டார் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

வர்த்தக இடத்தில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பேணுவது, பிறருக்கு இடையூறு ஏற்படுத்தாமலிருப்பது போன்ற நிபந்தனைகளை கடைபிடிக்கும்படி சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள  இந்த வர்த்தக வாய்ப்பை அவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்வர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தலைமையில் நடைபெற்ற நடமாடும் அங்காடி வியாபாரிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது நோராய்னி இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்பான  இடங்களில் வர்த்தகம் புரிய சிறு வியாபாரிகளுக்கு தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வழங்கும்படி ஊராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டிருந்தார்.


Pengarang :