ACTIVITIES AND ADSPBTSELANGORYB ACTIVITIES

காசநோய் சிகிச்சையைத் தீவிரப்படுத்த வெ. 10 லட்சம் ஒதுக்கீடு- சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், மார்ச் 25- காசநோய் சிகிச்சையை தீவிரப்படுத்துவதற்காக இவ்வாண்டில் பத்து லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக சுமார் இரண்டாயிரம் காசநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று சுகாதார துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

காசநோயின் அபாயம் குறித்து பொதுமக்களில் பலர் இன்னும் அறியாமல் இருப்பதாக அவர் சொன்னார்.

காசநோயாளிகளில் பலர் ஆறு மாதகால சிகிச்சையை முழுமையாக முடிக்காத காரணத்தால் அந்நோய்ப் பரவலுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, அந்த ஆபத்தான நோயை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக பொதுமக்கள் மாநில அரசின் இந்த சிகிச்சைத் திட்டத்தின் வாயிலாக தொடர் சிகிச்சைகளைப் பெற்று பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

இவ்விவாகரத்தில் ஊராட்சி மன்றங்களும் தங்களின் சுகாதாரப் பிரிவுகளின் பணியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

குடியிருப்புகளில் சுகாதாரம் தொடர்பான சோதனைகளை மட்டும் மேற்கொள்வதில் அவர்கள் கவனம் செலுத்தக்கூடாது. மாறாக, அந்நோய்த் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபாடு காட்ட வேண்டும் என அவர சொன்னார்.


Pengarang :