ACTIVITIES AND ADSPENDIDIKANSELANGOR

சிலாங்கூரிலுள்ள 60 நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டன- மந்திரி புசார் தகவல்

சபாக் பெர்ணம், மார்ச் 28– அதிகமான வருகையாளர்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 60 நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நவீன வடிவமைப்பை உள்ளடக்கிய அந்த தரம் உயர்த்தும் பணி நகர்புற நூலகங்களை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் உள்ள நூலகங்களையும் உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

கால மாற்றத்திற்கேற்ப அறிவை சேகரிக்கும் மையங்களாகவும் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவையாகவும்  நூலகங்கள் விளங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

நூலகம் என்பது புத்தகப் புழுக்களுக்கு மட்டுமே ஏற்ற இடங்களாகவும் சலிப்பைத் தரக்கூடிய மற்றும் பாடங்களை மீள்பார்வை செய்வதற்கு மட்டும் பயன்படக்கூடிய மையங்களாகவும் கருதும் போக்கை களைவதில் இந்த தரம் உயர்த்தும் நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

‘நூலகம் எனது இரண்டாவது இல்லம்‘ என்ற கோட்பாட்டிற்கேற்ப குடும்பவியல் அம்சங்களையும் தகவல் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கிய ஓரிட மையமாக இதன் பங்கு விரிவுபடுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதும் 103 பொது நூலகங்கள் உள்ளதாக இங்குள்ள டத்தாரான் சபாக்கில் பொது நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.


Pengarang :