ECONOMYPBTSELANGORTOURISM

சிலாங்கூர்-ஜப்பான் நட்புறவு பூங்கா ஷா ஆலமில் திறக்கப்பட்டது

ஷா ஆலம், ஏப் 2– இங்குள்ள மெர்டேக்கா சதுக்கம் அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலாங்கூர்-ஜப்பான நட்புறவு பூங்கா பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

இந்த பூங்கா 2.428 ஹெக்டர் நிலப்பரப்பில் சுமார் 38 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்டதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஹரிஸ் காசிம் கூறினார். இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்தாண்டு முற்றுப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரை தனது முதன்மை முதலீட்டாளராக தொடர்ந்து வைத்திருக்கும் ஜப்பான் அரசின் கடப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்த நட்புறவு பூங்கா அமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல் செய்யப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இந்த பூங்கா திறக்கப்படுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது என்று அதன் திறப்பு விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

இந்த பூங்கா ஜப்பானிய கலை மற்றும் கலாசார அம்சங்களைக் கொண்டுள்ளதோடு அதன் வேலிகளும் மூங்கில்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவை பொதுமக்கள் தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.


Pengarang :