ACTIVITIES AND ADSPBTSELANGOR

தேர்தலில் வெற்றி பெற தொகுதிகளில் சீரான நிர்வாகம் அவசியம்- அமிருடின் ஷாரி வலியுறுத்து

கோம்பாக், ஏப் 12- சீரான நிர்வாகம் காரணமாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ள எந்த கெஅடிலான் கட்சியின் தொகுதியும் கலைக்கப்படவில்லை என்று மாநில கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பல மக்கள் பிரதிநிதிகளை கட்சி இழந்த போதிலும் எந்த தொகுதியின் நிர்வாகமும் பாதிக்கப்படவில்லை என்பதோடு வழக்கம் போல் சீராக செயல்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

தொகுதி தலைவர்கள், தொகுதி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். இருந்த  போதிலும் ஒரு கிளை கூட இதுவரை கலைக்கப்படவில்லை. வலுவான நிர்வாகமே அதற்கு காரணமாகும் என்றார் அவர்.

இங்குள்ள டேவான் பெரிங்கினில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் கோம்பாக்  தொகுதி  பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வலுவான போராட்ட உணர்வுகளே கெஅடிலான் கட்சியின் வலுவான கோட்பாடுகளாக விளங்குவதை சுட்டிக் காட்டிய அவர், அந்த உணர்வுகள் தொடர்ந்து கட்டிக்காக்கப்படுவதை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த உணர்வுகளே எண்பது விழுக்காட்டு  கெஅடிலான் உறுப்பினர்கள் கட்சியில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் ரிமோர்மாசி போராட்டம்  துடிப்புடன் இருப்பதற்கும் காரணமாக விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :