ECONOMYSELANGOR

3,000 டாக்சி, பள்ளி பஸ் ஓட்டுநர்கள்  உணவு உதவிப் பொருள்களை பெற்றனர்

ஷா ஆலம், ஏப் 20– சிலாங்கூர் மாநிலத்திலுள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட டாக்சி மற்றும் பள்ளி பஸ் ஒட்டுநர்கள் மாநில அரசிடமிருந்து உணவு உதவிப் பொருள்களை பெற்றுள்ளனர்.

இந்த உணவுப் பொருள் விநியோகப் பணி ஊராட்சி மன்றங்களின் வாயிலாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இந்த உணவு உதவித் திட்டத்தில் மேலும் அதிகமானோர் பங்கேற்க  நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதன் வழி கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து அவர்கள் ஓரளவு விடுபட முடியும் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள கிளப் ஷா ஆலமில் நடைபெற்ற ஹிஜ்ரா அறவாரியத்தின் ஏற்பாட்டிலான  இப்தார் மற்றும் ஹிஜ்ரா அறவாரியத்தின் புதிய நிர்வாக இயக்குநரை அறிமுகம் செய்யும் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

டாக்சி மற்றும் பள்ளி பஸ் ஓட்டுநர்கள் அரசாங்கத்தின் உதவியை தொடர்ந்து நம்பியிராமல் தொழில்முனைவோர் திட்டங்களில் பங்கேற்று வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்குரிய வழிகளை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உணவு விநியோகம் போன்ற துறைகளில் இத்தரப்பினர் ஈடுபடுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் 43 லட்சத்து 50 வெள்ளி ஒதுக்கீட்டில் உணவுக் கூடை விநியோகத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கடந்த ஜனவரி 20ஆம் தேதி அறிவித்தார்.


Pengarang :