NATIONAL

போர்ட்டிக்சன் தொகுதியில் மீண்டும் போட்டி- அன்வார் கோடி காட்டினார்

போர்ட்டிக்சன், ஏப் 20- வரும் 15வது பொதுத்   தேர்தலில்   போர்ட்டிக்சன் நாடாளுன்றத் தொகுதியில் தாம்  மீண்டும் போட்டியிடுவதற்கான  சாத்தியத்தை  எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.

எனினும், அத்தொகுதியில் தாம் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை கெஅடிலான் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அவர் சொன்னார்.

எனது இதயம் போர்ட்டிக்சன் தொகுதியில் சிக்கிக் கொண்டது.  இந்த தொகுதி எளிதானது, சௌகர்யமானது மற்றும் பழக்கமானது என்று அவர் கூறினார்.

இத்தொகுதியில் நான் போட்டியிடுவது   குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.  போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சி   கட்சி முடிவு செய்தால், நான் இங்கு   போட்டியிடுவேன்” என்றார் அவர்.

போர்ட்டிக்சன் தொகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களுக்கு  உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர்  செய்தியாளர்களிடம்  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போர்ட்டிக்சன்  மக்களுடனான தனது நட்பு  மேம்பட்டு வருவதாகவும்   தம்மை வெளியூர்வாசியாக கருதும் பிரச்னை எழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளியூர்வாசி என்ற என்ற பிரச்னை எழவில்லை. வெளியூர்வாசியாக இருந்தால் தொகுதிக்கு அடிக்கடி வரமாட்டார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள். நமக்கு பல பொறுப்புகள் இருந்தாலும் தொகுதியைக் கவனிக்கும் பொறுப்பிலிருந்து தவறக்கூடாது என்றார் அவர்.

கடந்த  2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற போர்டிக்சன் தொகுதி இடைத்தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வார் 23,560 வாக்குகள் பெரும்பான்மையில் ஆறு வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

 

 


Pengarang :