NATIONALSELANGOR

கடத்தல் கும்பலின் புகலிடமாக விளங்கும் பூலாவ் கெத்தாம்

கோல கிள்ளான், ஏப் 28– சட்டவிரோதமாக பொருள்களை கடத்தி வருவதற்கும் அந்நிய நாடினர் கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழைவதற்கும் ஏற்ற இடங்களில் ஒன்றாக பூலாவ் கெத்தாம் தீவு விளங்குகிறது.

அண்டை நாட்டிற்கு அருகில் இருப்பதால் இத்தீவு சட்ட விரோத நடவடிக்கைளை மேற்கொள்வோருக்கு புகலிடமாக விளங்குவதாக உள்துறை அமைச்சின் பொது நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சூப்ரிண்ட். அகமது ரட்ஸி ஹூசேன் கூறினார்.

பூலாவ் கெத்தாம் தீவுக்கும் இந்தோனேசியாவின் தஞ்சோங் பாலாய்க்கும் இடையே உள்ள இடைவெளி 20 முதல் 30 கடல் மைல் மட்டுமே  ஆகும். ஒரு மணி நேர படகு பயணத்தில் இந்த தூரத்தை கடந்து விட முடியும் என்றார் அவர்.

‘ஒன் பென்தோம் பேங்க்‘ கலங்கரை விளக்கத்திற்கு அருகே  அமைந்திருப்பதும் இத்தீவு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதற்கு காரணமாக உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

இதன் காரணமாக சிகிரெட் மற்றும் மதுபானங்களை சட்டவிரோதமாக கடத்தி வருவதற்கு கடத்தல் கும்பல்கள் இத்தீவை பயன்படுத்துகின்றன. இது தவிர அந்நிய நாட்டினரை கள்ளத்தமாக நாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் இத்தீவு ஏற்றதாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி ஏப்ரல் 26ஆம் தேதி வரை 242 சட்டவிரோத அந்நியக் குடியேறிகளை  பொது அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதோடு  சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 53 லட்சம் வெள்ளி மத்திப்பிலான  சிகிரெட் மற்றம் மதுபானங்களையும் கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :