ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

நெல் விலையை 1,300 வெள்ளியாக உயர்த்தித் தர விவசாயிகள் கோரிக்கை

சபாக் பெர்ணம், ஏப் 28- நெல்லுக்கான உத்தரவாத விலையை மத்திய அரசாங்கம் டன் ஒன்றுக்கு 1,200  வெள்ளியிலிருந்து 1,300 வெள்ளியாக உயர்த்த வேண்டும் என்று சிகிஞ்சான் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் சாகுபடி செய்வதற்கான செலவு  அதிகரிப்பு மற்றும்  குறைவான உற்பத்தி  ஆகிய காரணங்களால் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் கூறினர்.

உரம் மற்றும் பூச்சுக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு கண்டுள்ளதோடு மனித ஆற்றலை பயன்படுத்தும் காரணத்தால் விவசாய நிலங்களின் பராமரிப்புச் செலவும் அதிகரித்துள்ளது என்று ரோஜிகின் சபினி என்ற விவசாயி கூறினார்.

நிலம் இல்லாத பலர்  ஒரு பருவத்திற்கு 4,000 வெள்ளி என்ற  கட்டணத்தில் நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். அந்த பருவத்தில் ஏழு டன் நெல்லை மட்டுமே அறுவடை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு அறவே லாபம் கிடைக்காது என்றார் அவர்.

பெர்னாஸ் எனப்படும்  படிபெராஸ் நேஷனல் நிறுவனத்தின் குத்தகை அதிகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து சுமார் 50 விவசாயிகளுடன் மறியலில் ஈடுபட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பயிர்களை பீடிக்கும் நோய் காரணமாக நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதாக மற்றொரு விவசாயியான ஆர்.சோமசுந்தரம் கூறினார்.

நோய் பீடிப்பு காரணமாக பத்து டன் உற்பத்தியாகும் இடத்தில் ஏழு டன் நெல் மட்டுமே உற்பத்தியாவதாக அவர் சொன்னார்.

பூச்சித் தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக மருந்துகளை வாங்க அதிக தொகையை செலவிடுவதால் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :